Tuesday, 17 July 2018

பாடம் தந்த ரயில் பயணம்

சென்னையிலிருந்து திருச்சிக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கிறேன். ரயிலில் செல்வதே தனிசுகம் தான். ஐன்னலோர சீட்டு, அப்படியே கொஞ்சம் ஸ்நாக்ஸ், பக்கத்தில யாருன்னே தெரியாதவங்க. இதெல்லாம் ரயில் பயணத்தில் மட்டும் தான் அனுபவிக்கமுடியும். பஸ் பயணம், கார் பயணம், விமான பயணம் என எவ்வளவோ இருந்தாலும், ரயில் பயணம் மாதிரி வராது. இப்ப கொஞ்ச நாளாகத்தான் அடிக்கடி ரயிலில் போயிட்டு இருக்கேன். திருச்சியில சொந்தமாக வீடு கட்டிட்டுருக்கோம். அதனால அடிக்கடி பயணம்.

சொந்த ஊருக்கு அடிக்கடி போகிற பழக்கம் கிடையாது. (நேரம் கிடைக்காது) எப்போதாவதுதான் ஊருக்கு போவேன். அதுவும் அரசு பஸ்ஸில்தான். இப்பத்தான் டிக்கெட் விலை ஜாஸ்தியாயிடுச்சே. கட்டுபடியாகல. அதான் ரயிலில்.

ரயிலில் அடிக்கடி போய்ட்டு வரதினால, நிறைய சுவாரஷ்ய அனுபவம். இவ்வளவு நாளா இத மிஸ் பண்ணிட்டேன். govtkku தான் நன்றி சொல்லனும். பஸ் டிக்கெட் ஏத்தினதாலதானே, எனக்கு இந்த இனிமையான அனுபவம் கிடைச்சிருக்கு

நான் முடிவு பண்ணிட்டேன் இனிமேல் ரயிலில் தான் போகணும்ன்னு. இந்த ரயில் பயணம் நமக்கு மன தைரியத்தை நிறைய கொடுக்கும்கிறதனால சொல்றேன்.

வண்டி வேகமா போய்ட்டு இருக்கு. கொஞ்ச நேரத்தில், எல்லோரும் தெரிஞ்ச மாதிரி
பேச ஆரம்பிச்சிடுவாங்க. நீங்க எங்கே போணும்ன்னு ஆரம்பிச்சி, கடைசியில போன் நம்பர கொடுக்கிற அளவுக்கு போய்டுவாங்க. நிறைய குடும்ப கதைகள் கேட்கலாம். இடையில அவங்க வீட்ல நடந்த சன்டை எல்லாம் சொல்லுவாங்க. சொல்றவங்க வயசானவங்களா இருந்தா,  அவங்க தான் மாமியார், சின்ன வயசா இருந்தா, அவங்க மருமகள்ன்னு ஈசியா கண்டுபிடிச்சிடலாம். ஏன்னா,  முக்கால்வாசி மாமியார், மருமகள் சண்டையை பற்றித்தான் சொல்லிட்டு வருவாங்க. (இந்த சண்டை தீரவே தீராது போல) நல்ல வேளை எனக்கு மாமியாரும் இல்லை, நான் யாருக்கும் மருமகளும் இல்லை.

எனக்கு பக்கத்து சீட்ல ஒரு வயசானவர். ரொம்ப அழுக்கான ட்ரெஸ். துணியும் கொஞ்சம் கிழிஞ்சித்தான் இருக்கு. தமிழ் சுத்தமாவே தெரியல. அவர் பேசறது தெலுங்கு மாதிரி இருக்கு. யாரோ ஒருவர் எக்மோர் ஸடேஷனில் ஏறும்போது சாப்பாடு, தண்ணி மட்டும் வாங்கி கொடுத்தாங்க. அப்ப அவர் தெலுங்கில பேசினாரு. எனக்கு அவர் பக்கத்தில உட்கார்ந்தது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்திச்சி. ஆனாலும் வயசானவராச்சே, பார்க்கவும் பாவமா இருந்திச்சி. ரிசர்வ்ரேஷன் பண்ணி தான் வந்திருக்காரு. அப்போ அவர் சீட்ல அவர் உட்கார்ந்து தானே ஆகணும். கந்தையானாலும் கசக்கி கட்டு, கூலானாலும் குளித்து குடின்னு சொல்வாங்களே, அதுதான் ஞாபகத்துக்கு வந்திச்சி.

எனக்கு எதிர்புறம் மூணு பேர், எங்க பக்கம் மூணு பேர். எப்போதும் கலகலப்பா போகிற பயணம், இப்போ கொஞ்சம் அமைதியாகத்தான் இருந்திச்சி. அந்த பெரியவர் அங்க இருந்தது, யாரும் விரும்பலைன்னு தோணிச்சு. எல்லோரும் அவரை ஒரு மாதிரியாத்தான் பார்த்திட்டு வந்தாங்க. அவர் டிக்கெட் எடுக்காமல் வந்திருப்பார்ன்னுகூட பேசினாங்க.  நான் அவர் பக்கத்தில் உட்காந்திருந்ததால, எனக்கு எதிர்புறம் உள்ளவங்களையுடைய பார்வையை என்னால கவனிக்க முடிஞ்சிது. அவர் கால்ல செருப்பு கிடையாது, ஒரே ஒரு பேக். அதுவும் துவைச்சி பல மாதங்கள் ஆன மாதிரி இருந்துச்சி. இப்ப முதல் தடவையா இந்த மாதிரியான அனுபவம் கிடைச்சிருக்கு.

அந்த பெரியவருக்கு ஏதாவது உதவி வேணுமாண்ணு கேட்டு, செய்யலாமான்னு மனசில தோணிச்சு. ஆனா அவருக்கு தமிழ் தெரியல. எப்படி கேட்க்கிறது?

விருத்தாசலம் ஸ்டேஷன் வந்துச்சி. அந்த பெரியவர் அங்கதான் இறங்கினாரு. வயசானவரா இருந்தாலும் ரொம்ப வேகமா நடந்தாரு. அவர் வயசுக்கு இந்த நடையெல்லாம் நமக்கெல்லாம் சாத்தியமே இல்லேன்னு நினைக்கிறேன். (இந்த வயசிலலெல்லாம் கண்டிப்பா நாமெல்லாம் குச்சி வச்சித்தான் நடப்போம்)

அவர் நடக்கிறத பார்த்ததும், எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சி. அவர் எதைப் பற்றியும், யாரை பற்றியும் அலட்டிக்காமல் ஒரு வீறு நடைபோட்ட படியே இருந்தார்.

அவர்க்கிட்ட எந்த குறையும் இல்லாத மாதிரி அவர் நடை இருந்துச்சி. இப்ப என் மனதில் ஒரு உறுத்தல். உண்மையில,  நாங்க தான் மனதில் குறையோடு அவர் கூட உட்கார்ந்திருந்தோம். அவர்க்கிட்ட எந்த குறையும் இல்லை.

இதுவும் வாழ்க்கையில் நமக்கு பாடம்தான்....

இப்ப சொல்லுங்க, ரயில் பயணம் தனி அனுபவம் தானே.



No comments:

Post a Comment